HOME | PRESS RELEASE | EVENT PHOTOS |
பெட்டாலிங் ஜெயா சிவிக் செண்டரில் முரசோவியம் கவிஞர் முரசு நெடுமாறனின் 75 ஆண்டு சேவையைப் போற்றும் கலை விழா |
கிள்ளான், மலேசியா மே 31: பாப்பவின் பாவலர் என்று போற்றப்படும் மலேசியக் கவிஞர் முனைவர்
முரசு நெடுமாறன் அவர்களின் 75 ஆண்டு காலத் தமிழ்க் கொடைகளைப் பகிர்ந்து
கொள்ளும் நோக்கில், "முரசோவியம்" எனும் கலை விழாவினை அவரின் மாணவர்களும்
நண்பர்களும் குடும்பத்தினரும் சேர்ந்து ஜூன் 17ஆம் நாள் பெட்டாலிங் ஜெயா
சிவிக் செண்டரில் நடத்தவுள்ளனர். முனைவர் முரசு நெடுமாறன் அவர்கள் கேரி தீவில் பிறந்து வளர்ந்து தமிழ்ப்பள்ளி ஆசிரியராய்ப் பணியைத் தொடங்கி, மலேசிய புத்ரா பல்கலைக்கழகப் பகுதி நேரத் தமிழ் விரிவுரையாளராகவும் சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றியவர். கடந்த தைத்திங்கள் முதல் நாளில் 75ஆம் அகவை நிறைவு கண்ட முனைவர் தம் வாழ்வில் தமிழோடு, தமிழரோடு நடந்தவர். தமிழர் நலன், தமிழ் வளர்ச்சி, இலக்கிய ஆய்வுகள், கவிதைகள், இலக்கிய நாடகங்கள், குழந்தை இலக்கியம், மாணவர் கல்வி என இவர்தம் தொண்டுகள் பல துறைகளில் கிளை பரப்பின. அவர் படைப்புகளில் தலை நிமிர்ந்து நிற்கும் நூல்கள் மலேசிய சிங்கப்பூர் தமிழர்களின் அடையாளத்தை நமக்கு மீட்டுத்தரும் 'மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்', 'மலேசியத் தமிழரும் தமிழும்' எனும் இரு நூல்கள். "சிறு குழந்தைகளாக இருக்கும் போதே எங்களுக்குத் தமிழ் உணர்வினைப் பாலோடு கலந்து ஊட்டியவர் அப்பா. இவருக்கு இந்த விழாவினை அவரின் மாணவர்களோடும் நண்பர்களோடும் சேர்ந்து எடுப்பதில் எங்கள் எல்லோருக்கும் மிகுந்த மகிழ்ச்சியினைத் தருகிறது" என்று முரசு நெடுமாறன் மகன் முத்து நெடுமாறன் கூறினார். "எங்கள் வாழ்க்கையில் மிகவும் ஆழ்ந்து பதிந்த அவரின் சில பாடல்களை நினைவு கூர்ந்து, இசையோடு படைக்கும் அதே வேளையில் சில இன்ப வியப்பினை ஊட்டும் நிகழ்ச்சிகளையும் விழாவில் ஏற்பாடு செய்துள்ளோம்" என்று மேலும் கூறிய அவர் "கவிஞரின் மாணவர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அவரின் படைப்புகளைச் சுவைத்து மகிழ்ந்த - பயனுற்ற தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்" என்று கூறினார். கவிஞரின் தேர்ந்தெடுக்கப்பெற்ற சில இலக்கியப் படைப்புகள் கலை நயத்துடன் மேடையேற்றப் படும். இந்த விழா சரியாக மாலை 6.30மணிக்குத் தொடங்கி இரவு 8.30மணிக்கு முடிவுறும். அதன் பின் சுவையான விருந்தும் வழங்கப் பெறும். நுழைவு முற்றிலும் இலவசம். மேல்விவரங்களுக்கு: 012-2318754/012-2329018 அல்லது http://murasoviyam.com. |
மின்னஞ்சல்: info@murasoviyam.com |